

புதுடெல்லி,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டதில் அப்போது நிதி மந்திரியாக பதவி வகித்த ப.சிதம்பரத்தின் செல்வாக்கை அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் பயன்படுத்தியாக புகார் கூறப்பட்டது.
இதுபற்றி அமலாக்கத்துறை சட்டவிரோத பணிபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தினம் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் அவருடைய ஆடிட்டரான பாஸ்கரராமனை நேற்று காலை டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
பின்னர் அவர் தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணைக்கு பாஸ்கரராமன் ஒத்துழைக்கவில்லை. பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. எனவே அவரை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.
எனினும் தனிக்கோர்ட்டு நீதி பதி சுனில் ரானா, அவரை 5 நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு அனுமதி அளித்தார்.