கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

விசா முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன், விகாஸ் மகாரியாவின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விசா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பாஸ்கரராமன், விகாஸ் மகாரியா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் கடந்த 30-ந்தேதி விசாரித்தார்.

கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை.

ஆதாரங்கள் திரட்டப்படும் வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைதுசெய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஆடிட்டர் பாஸ்கரராமன் சார்பில் ஆஜரான வக்கீல், கைது விஷயத்தில் சி.பி.ஐ. எந்த விதியையும் பின்பற்றவில்லை என்றார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, விசா முறைகேடு வழக்கில் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக பண பரிவர்த்தனை நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்ஜாமீன் அளித்தால் விசாரணை பாதிக்கும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை ஜூன் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், முன்ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை நீதிபதி எம்.கே.நாக்பால் நேற்று பிறப்பித்தார். அதில், விசா முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன், விகாஸ் மகாரியாவின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக தெரிவித்தார். மேலும், கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும் கோரிக்கையையும் நிராகரித்தார்.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் விரைவில் முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com