

புதுடெல்லி
ப.சிதம்பரம் 2007-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கிடைத்த முதலீட்டு தொகையை, குறைத்து காட்டுவதற்கு உதவி செய்ததாகவும், அதற்கு ஆதாயமாக ரூ.10 லட்சத்தை, தான் மறைமுகமாக நடத்தி வரும் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இருந்து பெற்றதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது கடந்த ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த ஜனவரி மாதம் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அவருடைய அலுவலகத்தில் இருந்து பணபரிமாற்ற முறைகேட்டை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, அவருடைய மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போராவை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ. சுற்றறிக்கைகளை வெளியிட்டது. இதை தள்ளுபடி செய்யக் கோரியும், வர்த்தக நிமித்தமாக தான் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அவர் மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில் சென்னை ஐகோர்ட்டே விசாரித்து இதுபற்றி முடிவெடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து அவருடைய மனுவை கடந்த 16-ந்தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லத் தடை இல்லை என்றும் அதேநேரம், தனது பயணம் குறித்த முழு விவரங்களையும் சி.பி.ஐ.யிடம் அவர் தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் பிப்ரவரி மாதம் 28-ந்தேதிக்குள் கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பி விடவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று காலை அவர் லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமானத்தில் கார்த்தி சிதம்பரம் வந்ததும் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றனர். சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் தான் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டெல்லி பாட்டியாலா அவுஸ் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுமித் அனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒரு நாள் மட்டும் அவரை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிகாரிகள் குழு ஒன்று கார்த்தி சிதம்பரத் திடம் விசாரணை நடத்தியது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறு வனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற்றது பற்றி ஏராளமான கேள்விகள் கேட்டனர்.
அதுபோல ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு கள் பற்றியும் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். விடிய, விடிய இந்த விசாரணை நடந்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம் நேரடியாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாரிகளிடம் அவர் மிரட்டலாக நடந்து கொண்டதாகவும் சரிவர ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இன்று அதிகாலை மட்டும் சிறது நேரம் கார்த்தி சிதம்பரத்துக்கு ஓய்வு அளிக்கப் பட்டது. பிறகு மீண்டும் அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையை முடித்து இன்று மதியம் 12.30 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுவார் என தெரிகிறது. சற்று நேரத்தில் பாட்டியாலா நீதி மன்றத்தில் கார்த்தி சிதமபரம் ஆஜர் படுத்தப்படுவார் என கூறப்பட்ட நிலையில் டெல்லியில் சிபிஐ விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் மருத்துவக் குழுவினர் பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் லண்டனில் தனது சுற்று பயணத்தை முடித்து கொண்டு அவசரமாக பாதியில் திரும்பினார் ப.சிதம்பரம். தொடர்ந்து கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியுடன் ஆலோசனை நடத்தினார். கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில் வழக்கறிஞர்களுடன் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் மகன் ஆஜர்படுத்தப்படும் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றார்.
விசாரணை முடிந்ததும் கார்த்தி சிதம்பரத்தை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்தியை மீண்டும் காவலில் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதி கேட்பார்கள். கார்த்தி சிதம்பரம் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும். கார்த்தியை சி.பி.ஐ. காவலில் மேலும் விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்குமா? அல்லது ஜாமீன் வழங்குமா என்பது அப்போது தெரிய வரும்.