

புதுடெல்லி,
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், அந்த காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சிபிஐ காவல் நிறைவடையவிருக்கும் நிலையில்,
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜி, மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரிடமும் கூட்டாக விசாரணை நடத்த முடிவு செய்த சிபிஐ அதிகாரிகள், கார்த்தி சிதம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை மும்பை அழைத்துச் சென்றனர். சிறையில் இருவரிடமும் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர். மகன் கார்த்தி சிதம்பரத்தை பார்க்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் வருகை தந்தார். அங்கு ப.சிதம்பரமும், நளினி சிதம்பரமும் கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க கோரி சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை 2 மணிக்கு நடைபெற்றது.
கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பெரிய சதித்திட்டத்தை அகற்றுவதற்கு, நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவரை இன்னும் காவலில் வைத்திருக்க வேண்டும். என எதிர்ப்பு தெரிவித்தது.
உங்களின் பெயர் என்ன என்று கேட்டால் நான் அரசியல்வாதி என கார்த்தி சிதம்பரம் பதில் கூறுகிறார். எங்களின் கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம் சரியான பதில் அளிக்கவில்லை. கார்த்தியை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ரூபாய் மட்டுமின்றி டாலருக்கும் பங்கு இருக்கிறது. ஐ.என்.எஸ். மீடியா முறைக்கேடு வழக்கில் முக்கிய கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் முதல் கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பாத நிலையில் சிபிஐக்கு எப்படி ஆதாரம் கிடைத்தது என கார்த்தி தரப்பில் வக்கீல் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பினார்.
தவறான வழியில் கார்த்தியை காவலில் வைக்க சிபிஐ விரும்புகிறது. அவர் ஒத்துழைக்கிறார். மற்றும் நீங்கள் விரும்புவதை கூறவேண்டும் என்பது அவசியம் இல்லை என சிங்வி வாதாடினார்.
இந்திராணி முர்கர்ஜியின் வாக்குமூலமானது எங்களுக்குத் தெளிவான சான்றுகளில் ஒன்றாகும். ஆனால் அது ஒன்று மட்டும் இல்லை என சிபிஐ வக்கீல் துஷார் மேத்தா வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுமீதான உத்தரவு 4.30 மணிக்கு வழங்கப்படும் என கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி 4.30 மணிக்கு நீதிமன்றம் சிபிஐயின் கோரிக்கையை ஏற்று கார்த்தி சிதம்பரத்திற்கு 3 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த காவல் நீட்டிப்பு 3 வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சிபிஐ 9 நாட்கள் கேட்ட நிலையில் 3 நாட்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.