கரூர் சம்பவம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம்

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்த சம்பவம் கரூரில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது. இதற்கிடையே, விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.
இந்த நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. விபத்துக்கான சூழ்நிலை மற்றும் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.






