

டெல்லி,
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் 3 முறை ஆஜராகியுள்ளார். அந்த வகையில் நேற்று முன் தினம் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு விசாரணைக்கு 17ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜி நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், டெல்லி சென்ற செந்தில் பாலாஜி இன்று காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 11 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 6 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது தவெக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மேலும், இந்த குற்றசாட்டுகள் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது சிபிஐ இடம் தவெக புகார் மனுவும் அளித்தது. இந்த புகார் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தவெக தலைவர் விஜய், நிர்வாகிகள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றது.
தவெக கூட்டத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் செந்தில் பாலாஜியின் அறக்கட்டளை குறித்த அடையாளங்கள் எவ்வாறு இடம்பெற்றது? கரூர் கூட்ட நெரிசல் நடந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றது எப்படி? உள்பட பல்வேறு கேள்விகளை செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி பதில் அளித்தார். இதையடுத்து 6 மணிநேரமாக நடந்த சிபிஐ விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை மீண்டும் விசாரணைக்கு அழைக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.