

கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதேவேளையில், 2-வது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கரூர் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், செந்தில் பாலாஜி தரப்பிலோ அல்லது அவரது சார்பாகவோ யாரும் சம்மனை பெறவில்லை என்றும் மின்னஞ்சலில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.