

காஸ்காஞ்ச்,
உத்தரபிரதேசத்தில் குடியரசு தினவிழாவையொட்டி நேற்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் காஸ்காஞ்சில் மற்றொரு பிரிவினர் வாழும் பகுதியின் வழியாக மூவர்ணக்கொடியுடன் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். பில்ராம்கேட் பகுதியில் மதுரா - பரேலி சாலையில் இந்த குழு பேரணியாக சென்ற போது அவர்கள் மீது கல் வீசப்பட்டு உள்ளது. இதனையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் நேரிட்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் சந்தான் குப்தா (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மோதல் தொடர்பாக இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வண்ணம் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இன்று சந்தான் குப்தாவிற்கு இறுதிசடங்கு நடந்தது, இறுதி சடங்கை அடுத்தும் அங்கும் வன்முறை வெடித்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 5-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டமான நிலையே நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் வன்முறை சம்பவம் தொடர்பான தகவல் வெளியானதும் கூடுதல் சிறப்பு படை போலீசார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் மாவட்டம் முழுவதும் பதட்டமான நிலையே தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.