

ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தின் நார்பால் பகுதியை சேர்ந்த வாலிபர் அடில் தெலி (வயது 23). இவர் 8 நாட்களில் 3,600 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்து உள்ளார்.
நடப்பு ஆண்டில் மார்ச் 22ந்தேதி காலை 7.30 மணியளவில் ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் இருந்து அவரது பயணம் புறப்பட்டது. இதன்பின்பு அவர் கடந்த மார்ச் 30ந்தேதி காலை 9 மணியளவில் கன்னியாகுமரிக்கு வந்தடைந்து உள்ளார்.
அமிர்தசரஸ் நகரில் குருநானக் தேவ் பல்கலை கழகத்தில் முதுகலை பட்டம் பயின்று வரும் அடில், சைக்கிள் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2019ம் ஆண்டு, ஸ்ரீநகரில் இருந்து லே வரையிலான 40 கி.மீ. தொலைவை 26 மணிநேரத்தில் கடந்து சென்றுள்ளார். இது அவருக்கு ஊக்கம் ஏற்படுத்தி உள்ளது.
தொடர்மழை, நிலச்சரிவு என தொடக்கம் முதல் பல்வேறு இடையூறுகளை சந்தித்த அடில், தொடர்ந்து முயற்சித்து கின்னஸ் உலக சாதனை படைத்து உள்ளார். அவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3,600 கி.மீ. தொலைவை 8 நாட்கள், ஒரு மணிநேரம் மற்றும் 37 நிமிடங்களில் சைக்கிளில் பயணம் செய்து கடந்து இந்த சாதனையை படைத்து உள்ளார்.