நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது: காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது - துணைநிலை கவர்னர்கள் இன்று பதவியேற்பு

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக முறைப்படி பிரிந்தது. அவற்றுக்கான துணைநிலை கவர்னர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார்கள்.
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது: காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது - துணைநிலை கவர்னர்கள் இன்று பதவியேற்பு
Published on

புதுடெல்லி,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி காஷ்மீர் இனிமேல் மாநிலம் இல்லை. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்துவிட்டது.

இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கின்றனர்.

அதன்படி கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஸ்ரீநகர், லே ஆகிய இடங்களில் பதவியேற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இருவருக்கும் காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு புதுச்சேரியில் இருப்பது போல சட்டசபை இருக்கும். அங்கு போலீஸ் மற்றும் சட்டம்-ஒழுங்கு போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிலம் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வசம் இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com