

புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதில் தேசிய மாநாடு கட்சித்தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்தி ஆகிய முன்னாள் முதல்-மந்திரிகள் முக்கியமானவர்கள் ஆவர். இதில் பரூக் அப்துல்லா, தற்போதைய மக்களவையின் உறுப்பினரும் ஆவார்.
இவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்ற மக்களவையிலும் பெரும் அமளியை கிளப்பியது.
இந்த பிரச்சினையை பூஜ்ஜிய நேரத்தின் போது காங்கிரஸ் கட்சி எழுப்பியது. கட்சித்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த பிரச்சினையை எழுப்பி பேசும்போது, காஷ்மீரில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 3 முன்னாள் முதல்-மந்திரிகள் கடந்த 6 மாதங்களாக சட்ட விரோதமாக சிறை வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கான சரியான காரணம் கூட அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரசை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான சுரேஷ் கூறுகையில், சிறை வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவின் உரிமைகள் மறுக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் அவரது நலனையும், அவர் மக்களவையில் பங்கேற்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதிப் பந்தோபாத்யாய் பேசும்போது, பரூக் அப்துல்லாவின் உடல் நலம் குறித்தாவது இந்த அவையில் தெரியப்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீரில் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பின்னர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் இந்த விவகாரத்துக்கு அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.