வெளிநாட்டு நிதியை சொந்த செலவுக்கு பயன்படுத்திய பிரிவினைவாதிகள் - தேசிய புலனாய்வுத்துறை தகவல்

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்காக வெளிநாடுகளில் இருந்து திரட்டிய நிதியை, பிரிவினைவாதிகள் தங்கள் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக தேசிய புலனாய்வுத்துறை கூறியுள்ளது.
வெளிநாட்டு நிதியை சொந்த செலவுக்கு பயன்படுத்திய பிரிவினைவாதிகள் - தேசிய புலனாய்வுத்துறை தகவல்
Published on

புதுடெல்லி,

காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத செயல்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்களுக்கு பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் ஹவாலா தரகர்கள் மூலமாக இந்த பணத்தை பெற்று வந்தனர்.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் கிடைக்கும் பணத்தை பொதுமக்களுக்கு வழங்கி பாதுகாப்பு படையினருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கல்வீச்சு சம்பவங்களை அவர்கள் ஊக்குவித்து வருகின்றனர். மேலும் நாள்தோறும் கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களையும், வன்முறை சம்பவங்களையும் அரங்கேற்றி அங்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசிய புலானய்வுத்துறை அதிகாரிகள், காஷ்மீரில் இயங்கி வரும் பல்வேறு பிரிவினைவாத இயக்க தலைவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீது கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் யாசின் மாலிக், ஆசியா அண்ட்ரபி, சபிர் ஷா, மசரத் ஆலம் போன்ற பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜகூர் வட்டாலி உள்ளிட்ட ஹவாலா தரகர்களும் சிக்கினர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வரும் வழிகள் கண்டறியப்பட்டன. அதன்படி பாகிஸ்தான், அமீரகம் போன்ற வெளிநாடுகளில் இருந்தும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்தும் பணத்தை பெறும் ஹவாலா தரகர்கள், அதை போலி நிறுவனங்களின் பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி, பின்னர் அவற்றை மேற்படி பிரிவினைவாதிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியது தெரியவந்தது.

இவ்வாறு பிரிவினைவாதிகளின் கையில் வரும் பணத்தை அவர்கள் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதுடன், தங்கள் சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி துக்தரன்-இ-மிலாத் அமைப்பின் தலைவரான ஆசியா அண்ட்ரபி, வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று காஷ்மீரில் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இதற்காக சிறிதளவு பணத்தை செலவிடும் அவர் மீதமுள்ள தொகையை மலேசியாவில் கல்வி பயின்று வரும் தனது மகனின் கல்வி செலவுக்கு அனுப்பி வைத்ததை விசாரணையில் தெரிவித்து உள்ளார்.

இதைப்போல மற்றொரு பிரிவினைவாத தலைவரான சபிர்ஷா, காஷ்மீரின் பகல்காம் மாவட்டத்தில் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்கள் செய்து வருகிறார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் பாகிஸ்தானில் இருந்து பெற்ற நிதியை தனது தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் தேசிய புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com