காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து - 6 ஆண்டுகள் நிறைவு

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, மத்திய பாஜக அரசு ரத்து செய்தது.
புதுடெல்லி,
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 2023 டிசம்பரில் உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜம்மு - காஷ்மீருக்கு முடிந்தவரை விரைவில் மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, 2024ல் ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்தது.
இதில், முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அபார வெற்றி பெற்றது. அவரது மகன் ஒமர் அப்துல்லா, முதல்-மந்திரி பதவியேற்றார். அவரும், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககாஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர், ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்து பேசிய நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.






