கத்துவா வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி சிறுமியின் தந்தை மனு: பிற்பகலில் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

கத்துவா வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி சிறுமியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. #KathuaCase
கத்துவா வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி சிறுமியின் தந்தை மனு: பிற்பகலில் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மந்திரிகள் சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி தெரிவித்தார். 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுமி தரப்பில் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவாட் என்பவர் ஆஜராக உள்ளார் . இந்த வழக்கில் தான் ஆஜராவதை பலர் விரும்பவில்லை என்றும் ஜம்மு -காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபிந்தர்சிங் சலாதியா நான் ஆஜராவதைத் தடுக்க முயன்று வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சூழலில், எனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார். பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் எனவே வழக்கு விசாரணையை பிற மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை பிற்பகல் 2 மணியளவில் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com