

புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமி தரப்பில் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவாட் என்பவர் ஆஜராக உள்ளார் . இந்த வழக்கில் தான் ஆஜராவதை பலர் விரும்பவில்லை என்றும் ஜம்மு -காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபிந்தர்சிங் சலாதியா நான் ஆஜராவதைத் தடுக்க முயன்று வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சூழலில், எனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடந்தார்.
ஆனால் இந்த வழக்கை வேறுமாநிலத்திற்கும் மாற்ற காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.