

திருவனந்தபுரம்,
கிருஷ்ணர் அவதரித்த அற்புத நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் படைத்து, பாடல்களை பாடி அவரின் அருளை பெறுவர்.
அதன்படி நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் வட மாநிலங்களில் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் காலை முதலே சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் குறைந்த அளவிலே வருகை புரிந்தனர்.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து மிரட்டுகிறது. நேற்று முழு ஊரடங்கால் மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின. தொற்று பரவாமல் தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.