

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வடசேரிக்கர குடியிருப்புப் பகுதியில் புகுந்த 4 காட்டு யானைகளை, வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை வழித்தடத்திற்கு அருகிலுள்ள வடசேரிக்கர, இடத்தரமுக்கு மற்றும் அட்டக்குழி ஆகிய பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 4 காட்டு யானைகள் புகுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் விரைவு மீட்புக் குழுவினர், பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தீவிரப் போராட்டத்திற்கு பிறகு, 4 யானைகளும் பத்திரமாக காட்டுக்குள் திருப்பி அனுப்பப்பட்டன.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள அன்னாசித் தோட்டங்களே யானைகளை ஊருக்குள் ஈர்ப்பதாகவும், தோட்டங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள வேலிகள் யானைகள் மீண்டும் காட்டுக்குள் செல்லத் தடையாக இருப்பதாகவும் கூறி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.
• அட்டக்குழி தோட்டங்களில் யானைகளின் வழித்தடத்தை மறிக்கும் வகையில் உள்ள வேலிகள் உடனடியாக அகற்றப்படும்.
•வடசேரிக்கர மற்றும் இடத்தரமுக்கு பகுதிகளில் கூடுதல் வனக் கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.
•பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இப்பகுதியில் அன்னாசி சாகுபடியை ஒழுங்குபடுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக வனத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான் நாளை (சனிக்கிழமை) வடசேரிக்கர பகுதிக்குச் செல்லவுள்ளார். காட்டு யானைகளின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.