பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகளால் முடங்கியது, கேரளா; கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை

கேரளாவில் பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகளால் முடங்கியது, கேரளா; கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை
Published on

2 நாள் கட்டுப்பாடுகள்

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு நேற்றுமுன்தினம் 28 ஆயிரத்தை கடந்து விட்டது. எனவே தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.அதன்படி 24-ந்தேதி (நேற்று) பொது விடுமுறை அறிவித்த மாநில அரசு, 24 மற்றும் 25-ந்தேதிகளில் வெறும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்து இருந்தது.

அபராதம் விதிப்பு

இந்த 2 நாள் கட்டுப்பாடுகள் நேற்று காலையில் இருந்து அமலுக்கு வந்தது. இதனால் மாநிலம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.அவர்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் உண்மையான காரணங்களுடன் சென்றவர்களை மட்டுமே வெளியில் நடமாட அனுமதித்தனர். தேவையின்றி வெளியில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பஸ்கள் இயக்கப்பட்டன

அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும், பெரும்பாலும் பஸ்கள் பயணிகள் கூட்டமின்றியே இயங்கின. ஓட்டல்கள், உணவு விடுதிகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் பார்சல் மட்டுமே கொடுக்கப்பட்டன.

காய்கறி, பழம், இறைச்சி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. எனினும் கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

எர்ணாகுளத்தில் தடையை மீறி சொந்த ஊர் செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை போலீசார் திருப்பி அனுப்பினர். கொச்சியில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச்சென்ற வாடகைக்காருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மொத்தத்தில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளால் கேரளாவில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. அங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக நாள (திங்கட்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com