

கோட்டயம்
கேரளாவில் காரில் சென்ற வாலிபர் தற்கொலை நோக்கில் அடுத்தடுத்து மோதியதில் 7 வாகனங்கள் சேதமடைந்தன. 10 பேர் காயம் அடைந்தனர்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் கஞ்சிரப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில், அதிவிரைவாக சென்ற கார் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து கார்கள், ஒரு ஆட்டோ ரிக்சா மற்றும் ஒரு ஸ்கூட்டர் என மொத்தம் 7 வாகனங்கள் சேதமடைந்தன.
இதில், ஆட்டோ ரிக்சாவில் பயணித்த தம்பதியினர் மற்றும் அவர்களது இரு குழந்தைகளும் காயமடைந்தனர். ஆட்டோ ரிக்சாவும் பலத்த சேதமடைந்தது. தவிர, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் மற்றும் கார் மீதும் அந்த வாகனம் மோதியது. விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை செய்ததில், குட்டிக்கல் புத்தூரை சேர்ந்த ஷரோனின் பிலிப் (வயது 27) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. தற்கொலை நோக்கத்தில் அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. எனினும், தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் அவர் உயிர் தப்பி விட்டார். காயங்களுடன் காருக்குள்ளே இருந்த அவரை போலீசார் மீட்டனர்.
தீயணைப்பு துறையினரும் மீட்பு பணிக்கு உதவியாக செயல்பட்டனர். பிலிப் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட உள்ளது.