கணவருடன் தேனிலவு திட்டம்: தேர்தல் பணியை கொடுத்து கனவு கோட்டையை நசுக்கி விடாதீர்கள் - ஆசிரியை நூதன கோரிக்கை
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள காக்கநாடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கும், திருவனந்தபுரம் இன்போபார்க் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு வாலிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அவர்களது திருமணம் வருகிற 29-ம் தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் தீவிரமாக செய்து வருகின்றனர். திருமணம் முடிந்ததும் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான 5 நாட்கள் தேனிலவுக்கு வெளிமாநிலத்திற்கு செல்கிறார்கள்.
அதற்கான பயணத்திட்டத்தை பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டார்கள். இதற்காக பயணச்சீட்டு மற்றும் தங்குவதற்கான அறை உள்ளிட்டவைகளை முன்பதிவு செய்துவிட்டனர். இந்தநிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆசிரியை தனது கணவருடன் தேனிலவுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் நாளிலேயே கேரளாவில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆகவே தனக்கு தேர்தல் பணியை வழங்கிவிடக்கூடாதே என்ற அச்சம் ஆசிரியைக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் திருமணம் நடைபெற இருப்பதால் தனக்கு தேர்தல் பணி வழங்கக்கூடாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக கொச்சியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவரது மனுவில் தேர்தல் பணி என்ற பெயரில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட தனது தேனிலவு பயணம் தடைப்பட்டு விடக்கூடாது. எனது தேனிலவு கனவு கோட்டையை தகர்த்துவிடாதீர்கள் என்று கூறி இருந்தார்.
ஆனால் ஆசிரியை வந்த நேரத்தில் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை. அவர் தேர்தல் பணி தொடர்பாக வெளியே சென்றுவிட்டார். இதனால் கோரிக்கை மனுவை ஆசிரியையால் கலெக்டரிடம் நேரில் கொடுக்க முடியவில்லை. மிகவும் முக்கியமான கோரிக்கை என்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் நேரில் வழங்கி கூறினால் தான் நடக்கும் என்று ஆசிரியை கருதினார்.
இதனால் என்ன செய்வதென்று தவித்த ஆசிரியையை, நாளை அல்லது நாளை மறுநாள் வாருங்கள் என்று கூறி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

