

திருவனந்தபுரம்,
லட்சத்தீவின் நிர்வாக அதிகரியாக உள்ள பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை அமல்படுத்தியுள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பதாகவும், அதேபோல மதுபான கடைகளுக்கு அனுமதியளிப்பதாகவும் அறிவித்தார். இது அத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அரசின் திட்டங்களுக்காக பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தவும், குண்டர் சட்டத்தையும் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக அத்தீவு மக்கள் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
கேரள அரசு, லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.
இந்த நிலையில் லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பினராயி விஜயன் அறிமுகம் செய்த இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் நிறைவேறியது.