

திருவனந்தபுரம்,
திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசுகையில், கேரள போலீஸ் துறையின் செயல்பாடு தற்போது கவலை அளிப்பதாக கூறியதுடன், சில குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். உரிமைக்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது அத்துமீறி போலீசார் செயல்படுகின்றனர் என அவர் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கையெறி குண்டை எடுத்து சபையில் காண்பித்தார்.
அதைக் கண்டு முதல்மந்திரி பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், எனது கையில் உள்ள இந்த கையெறி குண்டு, திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் பயன்படுத்தியது ஆகும். இந்த குண்டு காலாவதியாகி விட்டது. காலாவதியான இந்த வகை குண்டுகளை பயன்படுத்தும்போது பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.