வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

வயநாடு,

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன. இயற்கையின் கோரத்தாண்டவத்தால் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமானார்கள். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் முப்படை வீரர்கள் 10 நாட்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100-க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்படி, 126 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 1,184 பேர் தற்போது 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியாகும்.

இந்த வங்கிக்கு கேரள மாநிலம் முழுவதும் கிளைகள் உள்ளன. அதேபோல வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையிலும் ஒரு கிளை உள்ளது. இந்த சூரல்மலை கிளையில் கடன்பெற்று, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக கேரள வங்கி, முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளது. மேலும் கேரள வங்கியின் ஊழியர்கள் தங்களின் 5 நாள் சம்பளத்தை முதல்-மந்திரியின் பேரிடர் நிதிக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com