

காசர்கோடு,
கர்நாடக மாநிலம் கள்ளியாவில் இருந்து கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பணத்தூர் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் திருமண கோஷ்டியினர் 65 பேர் இருந்தனர்.
இன்று மதியம் 12.30 மணி அளவில் காசர்கோடு மாவட்டம் பரியாரம் என்ற இடத்தில் பந்தூர்-சுலேயா நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென நிலைதடுமாறிய பேருந்து, சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இந்த கொடூர விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். பேருந்து விழுந்ததில் அந்த வீடும் பலத்த சேதம் அடைந்தது. விபத்து நடந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.