

திருவனந்தபுரம்,
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மலையாள மாதமான துலாம் மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன் சன்னிதானத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வருகிற நவம்பர் 17-ந்தேதி தொடங்கவுள்ள மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேவசம் போர்டு தலைவர், அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, சபரிமலை அடிவாரப் பகுதியான பம்பைக்குச் சென்ற முதல்-மந்திரி சதீசன், மண்டல-மகரவிளக்கு யாத்திரைக் காலத்தை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். பக்தர்களின் வருகை அதிகரிக்கும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
இதற்கிடையே, துலாம் மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை தந்தனர்.