

திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அக்கட்சியில் முதல்-அமைச்சர் யார்? என்பதை தேர்ந்தெடுப்பதில் கடந்த 10 நாட்களாக சிக்கல் நீடித்து வந்தது.
வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணு கோபால் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், கடைசியாக வி.டி.சதீசன் வெற்றி பெற்றிருக்கிறார். கேரள மாநில முதல்-மந்திரியாக அவர் பொறுப்பு ஏற்க இருக்கிறார்.
யார் இந்த வி.டி.சதீசன்? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
கேரள மாநிலம் கொச்சியில் தேவரா அருகே உள்ள நெட்டூரில் 1964-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி தாமோதர மேனன் - சிலாசினி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வி.டி.சதீசன்.
தனது ஆரம்பக் கல்வியை பனங்காடு உயர்நிலைப் பள்ளியிலும், இளங்கலைப் படிப்பை தேவராவில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியிலும், சமூகப் பணியில் முதுகலைப் பட்டத்தை ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியிலும் முடித்தார்.
தொடர்ந்து, வி.டி.சதீசன், கேரள சட்ட அகாடமி சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பையும், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முதுகலைச் சட்டப் படிப்பையும் முடித்தார்.
சுமார் 10 ஆண்டுகளாக, கேரள ஐகோர்ட்டில் வக்கீலாக வி.டி.சதீசன் பணியாற்றினார். ஆர்.லட்சுமி பிரியாவை மணந்தார். இந்த தம்பதிக்கு உன்னிமாயா என்ற மகள் உள்ளார். 1986-87-ல் தேசிய மாணவர் காங்கிரஸ் செயலாளராக, அரசியலில் அடியெடுத்து வைத்த வி.டி.சதீசன், 1996-ம் ஆண்டு பரவூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தோல்விதான் பரிசாக கிடைத்தது.
பின்னர், கேரள ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிக் கொண்டே 2001-ல் பரவூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்தார். அடுத்து, 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, 2011, 2016, 2021 தேர்தலிலும் அதே தொகுதியில் களம் இறங்கி வி.டி.சதீசன் வெற்றி பெற்றார். 5-வது முறையாக (2021) சட்டசபைக்குள் வி.டி.சதீசன் சென்றபோது, எதிர்கட்சித் தலைவரானார்.
தற்போது, 2026 சட்டசபை தேர்தலில், 6-வது முறையாக வெற்றி பெற்ற வி.டி.சதீசன், தற்போது முதல்-மந்திரியாக பொறுப்பேற்க இருக்கிறார்.