முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச நீரை திறந்து விடுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை நெருங்குவதால், அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை திறந்து விட்டுக்கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச நீரை திறந்து விடுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம்
Published on

நீர்வரத்து அதிகம்

கேரள மாநிலத்தின் கோட்டயம் உள்ளிட்ட தென்மத்திய மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் சிக்கியும் 40-க்கு மேற்பட்டோர் பலியானார்கள்.இன்னும் மழை நீடித்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டு பக்கம் வினாடிக்கு 1,750 கனஅடி தண்ணீரை திருப்பி விட்ட பிறகும், மாலை 4 மணி நிலவரப்படி, அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக இருக்கிறது.தற்போது நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது. மழை மேலும் தீவிரம் அடைந்தால், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து விடும் என்று அஞ்சப்படுகிறது.

திறந்து விடுங்கள்

அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு கால்வாய் வழியாக படிப்படியாக தண்ணீரை திறந்துவிட வேண்டிய அவசர தேவை ஏற்படும்.ஆகவே, தாங்கள் (மு.க.ஸ்டாலின்) இப்பிரச்சினையில் தலையிட்டு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்து விடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அப்படி திறந்து விடும்போது, மதகுகளை திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே அதுகுறித்து கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.அதன்மூலம், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு ஆகும். அதற்காக சட்ட போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், 142 அடி உயரத்தை நீர்மட்டம் எட்டக்கூடாது என்ற அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு கேரள முதல்-மந்திரி கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com