3 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம்: நட்புடன் பழகி குழந்தையை கொன்ற வாலிபர்

3 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த வாலிபர் நட்புடன் பழகி 6 வயது குழந்தையை கொன்ற கொடூரம் நடந்துள்ளது.
3 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம்: நட்புடன் பழகி குழந்தையை கொன்ற வாலிபர்
Published on

திருவனந்தபுரம்

கேரளாவில் ஆறு வயது குழந்தை கழுத்து இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் முக்கியத் திருப்பமாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. கேரளாவை அதிர வைத்துள்ள இந்த சம்பவத்தில், கொடுஞ்செயலில் ஈடுபட்டவரிடம் போலீச் நேரடி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம்தேதி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான பெற்றோரின் 6 வயது குழந்தை வீட்டில் வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிறு இறுக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. குழந்தை விளையாடும்போது கழுத்து இறுக்கி இறந்ததாக கூறப்பட்டது.

குழந்தையின் பிரேத பரிசோதனை முடிந்து சுரக்குளம் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. கிராம மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். குழந்தையின் பக்கத்து வீட்டை சேர்ந்த அர்ஜூனன் ( வயது 22 ) என்ற வாலிபர் தேம்பி தேம்பி அழுதார்.அவர் சிறுமியை தான் மிகவும் நேசித்ததாக கூடி இருந்தவர்களிடம் கூறினார்.இவர் சிபிஐ (எம்) இன் இளைஞர் பிரிவில் உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில் இடுக்கி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சிறுமி 3 வயதில் இருந்து இதே கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்த போலீசார் அந்த குடும்பத்துடன் பழகி வந்த அர்ஜூனனிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஆர்ஜூனன் 2 நாட்களாக குழந்தையை பார்க்கவில்லை என கூறி உள்ளார்.

தொடர்ந்து விசாரணையில் அக்கம்பக்கத்தவர்கள் குழந்தையை அர்ஜூனனுடன் பார்த்ததாக கூறி உள்ளனர். போலீசார் அர்ஜூனனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததை அர்ஜூனன் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்றும், சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியபோது இறந்துவிட்டதால், வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிற்றில் கட்டி தொங்க விட்டுள்ளார். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய பிறகு குழந்தையின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்று சாதாரணமாக பழகியுள்ளார். அர்ஜூனனின் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடங்களுக்கு அழைத்துச்சென்று அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.

இந்த வழக்கிற்கும் 2017 ஆம் ஆண்டில் சென்னையில் ஏழு வயது சிறுமி ஹாசினி - பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட வழக்குக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளன. சென்னை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், 23 வயதான தஸ்வந்த், பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர். அர்ஜுனைப் போலவே தஸ்வந்த், ஹாசினியை அணுகி, அவளை கவர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கழுத்தை நெரித்து, கொலை செய்து உள்ளார்.

ஹாசினியை காணவில்லை என அவர்களது பெற்றோருடன் சேர்ந்தே தஸ்வந்தும் தேடிவந்தார். இதுபோலவே அர்ஜூனனும் செயல்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com