

மலப்புரம்,
கேரளாவில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய பெண் யூடியூபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மலப்புரம் அக்சயா மையம் அருகே போலீசார் நேற்று முன் தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 10 கிலோ எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அதை காரில் கடத்தி வந்த பிரபல யூடியூபரான மினு ஜாஸ்மின் (வயது 23) மற்றும் அனாஸ் (வயது 24), சபீர்(வயது 24), சஜீத்(வயது 21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ. 1.50 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களில் அனாஸ், சபீர், சஜீத் ஆகியோர் மீது ஏற்கனவே போதைபொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.