

திருவனந்தபுரம்,
கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை அடுத்து, அதனை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருந்தது.
கேரளாவில் வெள்ள பாதிப்பினை அடுத்து மழைநீர் வடிய தொடங்கிய நிலையில், அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மழை, வெள்ளம் பாதித்த கேரள மாநிலத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து நிதி உதவி குவிந்து வருகிறது.
அந்த வகையில் கேரள மாநிலத்துக்கு உதவும் வகையில் முதல்மந்திரி நிவாரண நிதிக்கு இந்திய விமானப்படை மனம் உவந்து ரூ.20 கோடி நிதி அறிவித்தது.
கேரள முதல்மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்பிராந்திய விமானப்படை தளபதி பி. சுரேஷ் சந்தித்து ரூ.20 கோடி நிதியை வழங்கினார்.