

மும்பை,
கேரள மாநிலத்தில் பெய்த பேய் மழையால் அந்த மாநிலம் வரலாறு காணாத அழிவினை சந்தித்து உள்ளது. வெள்ளத்திற்கு 230க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேரிடரில் சிக்கி துன்பப்பட்டு இருக்கும் பொதுமக்களுக்கு உதவி செய்ய நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிதி வழங்கி வருகின்றன.
அந்த வகையில் இந்திய தனியார் நிறுவனங்கள் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கு உதவ முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக கேரள முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கிய அதானி குழுமம், அதே அளவு பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சேதங்களிலிருந்து மீளவும், அவர்களின் மறுவாழ்வுக்கும் வழங்கியுள்ளது. மேலும் அதானி நிறுவனம் ஒரு குழு ஒன்றை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை ஆயிரங்கணக்கில் கொடுத்து வருகிறது. போர்வைகள், துணிகள், அரிசி, பிஸ்கட்கள், துணி சோப் மற்றும் குளியல் சோப், டூத் பேஸ்ட், பிரஸ், மெழுகுவர்த்திகள், பைகள் என மக்களுக்கு அத்தியாவசியமான அனைத்து பொருட்களையும் வழங்கி வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் புத்துயிர் பெற போதுமான நிதி இல்லாததால் நாங்கள் தாழ்மையுடன் உதவுகிறோம். உலகின் எந்த பகுதிகளிலும் நேர்மையான பங்களிப்புடன் இருப்பதே ஓவ்வொரு அதானியனிற்கும் மகிழ்ச்சி. இதுவே எங்கள் மதிப்பை பிரதிபலிக்கும் என அதானிய குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி கூறினார். மேலும் இக்குழுமம் மருத்துவ வசதிக்காக மொபைல் மருத்துவ வசதி கொண்ட வேன் ஒன்றை வழங்கியுள்ளது.
அதே போல் ரிலையன்ஸ் பவுண்டேஷன், கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு ரூ.21 கோடியை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. வெள்ளத்தால் மன அழுத்தத்தில் வாடும் கேரள சகோதர, சகோதரிகளுக்கு இந்நேரத்தில் சக குடிமக்களான நாம் அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதை ஒரு கடமையாக கருத வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீட்டா அம்பானி கூறினார். மேலும் வெள்ளத்தால் வீடுகளை இழந்த சுமார் 15000 குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு சமையல் பாத்திரங்கள், உணவு சமைக்க தேவையான பொருட்கள், தங்குமிடம், போர்வைகள், ஷுக்கள் என பல பொருட்கள் வழங்கப்படும் எனக் கூறினார்.