

மும்பை,
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட அழிவினால் கேரளா பெரும் பொருளாதார இழப்பை அடைந்துள்ளது. மாநிலத்திற்கு ரூ. 30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தை கட்டமைக்க பல்வேறு தரப்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதில் வங்கி ஊழியர்களும் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதும் அடங்கும். மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 கிராமங்களை தத்தெடுப்பதாகவும் அறிவித்துள்ளது.
கேரளாவில் வாடிக்கையாளர்கள் கடன் தொகைக்கான மாத தவணை மற்றும் கடன் அட்டைகளுக்கான தொகையை கட்டுவதற்கு அவகாசம் எடுத்துக்கொண்டதற்கான கட்டணத்தொகை ஆகஸ்ட் மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது எனவும் அறிவித்துள்ளது.
கிராமங்களை தத்தெடுப்பதின் பகுதியாக வங்கி கிராமங்களில் மருத்துவ முகாம்களை அமைக்கும், மருத்துவ மையங்களை மறு கடட்மைப்பு செய்யவும், பள்ளிகளுக்கு ஆதரவு, புனர்வாழ்வு, புனரமைத்தல், வாழ்வாதாரங்களை மீளமைப்பதற்கான திறன்களை வழங்குதல் ஆகியவையும் செய்து கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் கேரள மக்களுடன் நாங்கள் இருக்கிறோம், என வங்கியின் இயக்குநர் ஆதித்யா புரி கூறியுள்ளார்.