

திருவனந்தபுரம்,
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தத்தளித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி உள்ளனர். 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. ஆலுவா, காலடி, பெரும்பாவூர், மூவாற்றுப்புழா, சாலக்குடி போன்ற பகுதிகளில் தத்தளித்து வரும் மக்களை மீட்க உள்ளூர் மீனவர்களும் தங்கள் படகுகளுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு மீட்கப்படும் மக்கள் அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 1568 முகாம்களில் 52,856 குடும்பங்களை சேர்ந்த 2.23 லட்சம் பேர் தங்கியிருக்கின்றனர். எனினும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் இன்னும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள், தங்களை மீட்குமாறு சமூக வலைத்தளங்களில் உதவிகேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் தவித்து வருகிறார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடுதல் படைகளை அனுப்பவும் மத்திய அரசு பாதுகாப்பு படைகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.