கேரள வெள்ளம்; ஒரு மாத ஊதியத்தினை வழங்க வெங்கையா நாயுடு தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் முடிவு

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் கேரள வெள்ளத்திற்கு ஒரு மாத ஊதியத்தினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
கேரள வெள்ளம்; ஒரு மாத ஊதியத்தினை வழங்க வெங்கையா நாயுடு தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் முடிவு
Published on

புதுடெல்லி,

கேரளாவில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையும், 80க்கும் மேற்பட்ட அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரும், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவும் மாநிலத்தின் 14 மாவட்டங்களையும் நிலைகுலைய செய்திருக்கிறது.

கடந்த 8ந் தேதி முதல் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 197 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் 43 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் பல மாவட்டங்களில் ஏராளமானோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் சூழ்ந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த தகவல் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மீட்பு பணியும் தொய்வின்றி எளிதில் நடைபெறும்.

இந்த நிலையில், கேரள வெள்ளம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில், நாடாளுமன்ற கீழவை துணை தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் கீழவை மற்றும் குடியரசு துணை தலைவர் செயலகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கனமழை, வெள்ளம் மற்றும் நில சரிவு ஆகியவற்றால் பேரிடருக்கு ஆளான கேரளாவின் நிவாரண நடவடிக்கைகளுக்கு தங்களது ஒரு மாத ஊதியத்தினை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com