சுற்றுலா வந்த இடத்தில் மாயமான கேரள சிறுமி: 4 நாட்களுக்கு பிறகு கிடைத்தபோது.. என்ன நடந்தது?

போலீசார் மற்றும் வனத்துறையினர் மாயமான கேரள சிறுமியை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சுற்றுலா வந்த இடத்தில் மாயமான கேரள சிறுமி: 4 நாட்களுக்கு பிறகு கிடைத்தபோது.. என்ன நடந்தது?
Published on

சிக்கமகளூரு,

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஸ்ரீநந்தா (வயது 14). இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேருடன் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அவர்கள் கடந்த 7-ந் தேதி முல்லையன்கிரி மற்றும் சந்திரதிரிகோண மலைப்பகுதிகளை சுற்றிப் பார்த்தனர்.

மாணிக்கத்தாரா அருவி அருகே சென்ற அவர்கள் மாலை நேரத்தில் கீழிறங்கும் போது ஸ்ரீநந்தா திடீரென மாயமானார். போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், டிரோன் உதவியுடன் சுமார் 2 ஆயிரம் அடி ஆழமான பள்ளத்தில் ஸ்ரீநந்தா பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மீட்புக்குழுவினர் இறங்கி கயிறு கட்டி மாணவியின் உடலை மீட்டனர். செல்பி எடுக்கும்போது மலையில் இருந்து தவறி விழுந்தாரா? யாரேனும் அவரை பள்ளத்தில் தள்ளிவிட்டு கொன்றார்களா? அல்லது பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் கூறுகையில், “சடலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது, அவர் அணிந்திருந்த ஆடைகள் சேதமடையாமல் உள்ளன. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com