ஒரே நேரத்தில் 2 வாலிபர்களுடன் காதல்...இருவருக்கும் சந்தேகம் வந்ததால்...பலே நாடகமாடிய இளம்பெண்

ஒருவருடன் இருக்கும் போது மற்றொருவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.
ஒரே நேரத்தில் 2 வாலிபர்களுடன் காதல்...இருவருக்கும் சந்தேகம் வந்ததால்...பலே நாடகமாடிய இளம்பெண்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருந்துக்கடையில் மருந்தாளுராக வேலை பார்க்கும் ஒரு இளம்பெண், போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் பெண்கள் அவசர உதவி தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து, தன்னை ஒருவர் காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுவிட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கி விட்டு சென்று விட்ட தாகவும் கூறினார்.

அவரை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் அப்போது போலீசார் கேட்ட சில கேள்விகளுக்கு இளம்பெண் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அந்த பெண், நடந்து சென்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது இளம்பெண் நடந்து சென்றதாக கூறிய இடத்தில் கார் எதுவும் செல்லவில்லை. மாறாக அவர், வாலிபர் ஒருவருடன் ஜாலியாக பேசியபடி நடந்து சென்றது பதிவாகி இருந்தது. அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காண்பித்து அந்த வாலிபர் யார்? என்று கேள்வி கேட்டனர்.

அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்பதையும் வெளிநாட்டில் உள்ள காதலனை ஏமாற்றுவதற்காக

கடத்தல் நாடகமாடியதையும் இளம்பெண் ஒப்புக் கொண்டார். அந்த இளம் பெண், ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஒரே நேரத்தில் இரண்டு வாலிபர்களை காதலித்து வந்துள்ளார். ஒருவர் வெளிநாட்டிலும், மற்றொருவர் உள்ளூரிலும் வேலை பார்த்து வந்தனர்.

உள்ளூரில் இருந்த வாலிபரை அடிக்கடி நேரில் சந்தித்து பேசியபடி இருந்துள்ளார். வெளி நாட்டில் இருக்கும் வாலி பரிடம் போனில் பேசியபடி இருந்திருக்கிறார். ஒருவருடன் இருக்கும் போது மற்றொருவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது உள்ளூரில் இருக்கும் அவரது காதலனை சந்தித்தார். அவர்கள் ஒரு இடத்தில் நின்று பேசியபடி இருந்திருக்கின்றனர். அந்த நேரத்தில் வெளி நாட்டில் இருக்கும் காதலன் இளம்பெண்ணின் செல்போனுக்கு அழைத்தார். ஒரு காதலன் அருகில் இருக்கும் போது, மற்றொரு காதலனுடன் எவ்வாறு பேசுவது? என்று தவித்த இளம்பெண் இறுதியில் வெளிநாட்டில் இருந்த அழைத்த காதலனின் போனை எடுத்து பேசினார். அப்போது அருகில் இருந்த உள்ளூர் காதலன் நான் இருக்கும்போது வேறு யாருடன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். அவர் கேட்பது வெளிநாட்டில் இருந்து பேசிய மற்றொரு காதலனுக்கு போன் வழியாக கேட்டு விட்டது.

அவரும் அருகில் யார் இருக்கிறார்? எங்கு இருக்கிறாய்? என்று இளம்பெண்ணிடம் கேட்டார். இருக்கும் இடத்தை கூறினால் மாட்டிக்கொள்வோம். என்று கருதிய இளம்பெண், வெளிநாட்டு காதலனை ஏமாற்ற கடத்தல் நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தார். அந்த இளம்பெண், உள்ளூர் காதலனிடம் விடைபெற்று சம்பவ இடத்தி லிருந்து புறப்பட்டார். மேலும் போன் இணைப்பில் இருந்த வெளிநாட்டு காதலனிடம், யாரோ தன்னை கடத்திச் செல்கிறார்கள் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

தான் கூறியதை உண்மை என வெளிநாட்டு காதலனை நம்ப வைப்பதற்காக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் போன் செய்து தன்னை யாரோ மர்மநபர் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்.

இதையடுத்து கடத்தல் நாடகமாடிய அந்த இளம் பெண்ணை கைது செய்தனர். தவறான தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அவரின் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com