

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை உயர் கல்வி மந்திரி ரோஜி எம்.ஜான் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கூட்டணியால் அறிவிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களில் ஒன்றான இந்த உதவித்தொகை திட்டம் மாநில பட்ஜெட்டில் இணைக்கப்படும். மாணவிகளுக்கான ₹1,000 உத்தரவாத திட்டம் நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
கேரள பல்கலைக்கழகங்களில் கவர்னரின் தலையீடுகள் குறித்து மாநில அரசு மவுனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பல்கலைக்கழகங்களின் அன்றாட விவகாரங்களில் இத்தகைய தலையீடுகள் முந்தைய கம்யூனிஸ்டு கூட்டணி அரசின் ஆட்சி காலத்திலேயே தொடங்கி விட்டது. அதற்கு முன்பு, கேரள பல்கலைக்கழகங்கள் வரலாற்றில் இது போன்ற ஒரு நிலைமை கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. கேரளாவில் உயர்கல்வி துறையை காவிமயமாக்கும் எந்தவொரு முயற்சிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதரவு அளிக்காது. கேரள என்ஜினீயரிங், மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு வகுப்பு மதிப்பெண்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையே காரணம்’இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் கல்லூரி மாணவிக ளுக்கு மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கும் ₹1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த உதவித்தொகையை தற்போது த.வெ.க. அரசும் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.