குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல்

மனுவை விசாரித்து முடிக்கும் வரை சி.ஏ.ஏ.வை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் அந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. முன்னதாக சி.ஏ.ஏ.வுக்கு எதிராக, தி.மு.க., வி.சி.க., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, இந்த சட்டத்தை அமல்படுத்த தடை கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அசாம் காங்கிரஸ் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கேரள மாநில அரசின் சார்பிலும் இந்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், குடியுரிமை திருத்தச் சட்டம் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும், பாகுபாட்டை உருவாக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனுவை விசாரித்து முடிக்கும் வரை, உள்நேக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இச்சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com