

திருவனந்தபுரம்,
20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் பணியாற்றிய போது ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது கூறப்பட்டுள்ள புதிய புகாரில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், கேரளத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தபோது, ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு கடந்த மாதம் எழுந்தது. தற்போது இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஞானேஷ்குமார் 2006-ம் ஆண்டு கேரளத்தின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றியபோது திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே எம்.சி. சாலை விரிவாக்கப் பணி நடந்து வந்தது. இதனை கே.எஸ்.டி.பி. என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது.
மேலும் மலேசியாவைச் சேர்ந்த பாடி பெல் நிறுவனம் இந்த பணியை செய்து முடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது சாலை ஒப்பந்த பில் தொகையை வழங்க ரூ.2 கோடி ஞானேஷ்குமார் லஞ்சம் கேட்டதாக கட்டுமான ஒப்பந்ததாரர் சடய மங்கலத்தைச் சேர்ந்த சாஜன் என்பவர் தற்போது புதிதாக லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
இதையடுத்து முதல் கட்ட விசாரணையை நடத்திய லஞ்ச ஒழிப்பு தனிப்பிரிவு, ஞானேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வது தொடர்பாக, மாநில அரசிடம் அனுமதி கோரியது. தற்போது மாநில உள்துறை அமைச்சகம் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஞானேஷ்குமார் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.