

திருவனந்தபுரம்,
சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சையை உறுதி செய்யும் வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரங்களுக்கு ஆகும் செலவை மாநில அரசே ஏற்கும் திட்டத்தை கேரளா மாநில அரசு முன்னெடுக்கிறது.
விபத்தில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை உயிர் பிழைக்க முக்கியமான நேரத்தில் மருத்துவ உதவியை உறுதி செய்ய கேரள மாநில அரசு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தனியார் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டாலும் முதல் 48 மணி நேரங்களுக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் முக்கிய நேரத்தில் மருத்துவமனைகள் பணம் வாங்குவதால் ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் வகையில் அரசே அச்செலவை ஏற்கும் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
மாநில அரசு ஏற்கும் செலவு காப்பீடு நிறுவனங்கள் மூலம் சரிசெய்யப்படும். இவ்விவகாரம் தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் முழு திட்டம் வரையறை செய்யப்படுகிறது. இத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்கள் மரணம் அடைவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் கேட்டுக் கொண்டு உள்ளார். சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து காயம் அடைந்தவர்களுக்கு ஆகும் செலவிற்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இதற்காக விபத்தில் காயம் அடைந்தவர்கள் பாதுகாப்பு சேவை மையம் அரசு மருத்துவ கல்லூரிகள், மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ மையங்களில் அமைக்கப்படுகிறது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை எந்தஒரு கால தாமதமும் இன்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிறப்பு வசதிகள் அனைத்தும் அடங்கிய ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்களை தேர்வு செய்யும் வகையில் புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைந்த சேவை மையம் மருத்துவ உதவிக்காக மேற்கொள்ளப்படுகிறது.
அண்மையில் கேரளாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி காயமடைந்தார். சுமார் 7 மணி நேரம் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காததே, அவரின் மரணத்துக்கு காரணமாக அமைந்தது. சென்ற மருத்துவமனை எல்லாம் அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது. இதனையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மருத்துவமனைக்கு அரசு உத்தரவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காத வண்ணம் இத்திட்டத்தை கேரள அரசு கொண்டு வருகிறது.
இத்திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்த கேரள மாநில சாலை பாதுகாப்பு நிதி மற்றும் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கேரள சுகாதாரத் துறை, உள்துறை, நிதித்துறை மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் பெருநகர வளர்ச்சி துறை இணைந்து ஆலோசனை செய்து வடிவமைக்கின்றன.