

திருவனந்தபுரம்,
தந்தி டி.வி.க்கு கேரள கவர்னர் சதாசிவம் பாராட்டு தெரிவித்து உள்ளார். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தந்தி டி.வி.யை முன்மாதிரியாக கொண்டு மலையாள தொலைக்காட்சிகள் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
வாக்காளர் தினம்
திருவனந்தபுரத்தில் கனககுன்னு அரண்மனையில் கேரள தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் தினம் நேற்று நடைபெற்றது. இதில் கேரள கவர்னர் சதாசிவம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிக வாக்குப்பதிவில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் 75 சதவீத வாக்குப்பதிவு இருந்தது. கடந்த தேர்தலில் 77.7 சதவீதமாக வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
ஆன்லைன் மூலம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பரபரப்பான செய்திகளை ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இளைஞர்கள் தற்போது ஊடகங்களை நன்கு கவனித்து வருகிறார்கள். ஊடகங்களிடமிருந்து அவ்வப்போது கிடைக்கும் செய்திகளை பெற்றுக்கொள்கின்றனர். ஊடகங்களை கவனிப்பதற்காக நேரத்தை செலவிடுகிறார்கள்.
விழிப்புணர்வு
ஊடகங்கள் சரியான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களை தயார்படுத்துவது குறித்தும், எப்படிப்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும் கடந்த 2016-ம் ஆண்டு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தி டி.வி. செய்தி வெளியிட்டது. நானும் தந்தி டி.வி.யை பார்த்து வருகிறேன்.
தந்தி டி.வி.யின் பணிகளுக்காக இந்த ஆண்டு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
முன் மாதிரியாக...
தந்தி டி.வி.யை முன்மாதிரியாக கொண்டு மலையாள தொலைக்காட்சிகளும் பணியாற்ற வேண்டும். ஊடகங்களால்தான் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எனவே அந்த வகையில் ஊடகங்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.