கண்ணூர் பல்கலை. பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - கேரள ஐகோர்ட்டு

கண்ணூர் பல்கலைகழகத்தில் அசோசியேட் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசின் நியமன உத்தரவிற்கு விதித்த தடையை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கண்ணூர் பல்கலை. பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - கேரள ஐகோர்ட்டு
Published on

பெரும்பாவூர்,

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாளத்துறையில் அசோசியேட் பேராசிரியையாக பிரியா வர்கீஸ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் கூடுதல் செயலர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி ஆவார்.

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவிக்கு பிரியா வர்கீஸ் உட்பட 6 பேர் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசீலிக்கப்பட்ட 6 பேரில் ஆய்வு தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்த பிரியா வர்கீஸ் நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார். முதலில் ஆய்வு தேர்வில் 651 மதிப்பெண் பெற்ற ஜோசப் ஸ்கரியா நேர்முகத் தேர்வில் 30 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் பிரியா வர்கிசுக்கு கூடுதல் மதிப்பெண் தரப்பட்டதாகக்கூறி, வேண்டுமென்றே தன்னை புறக்கணித்ததாக கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த கேரள ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி சியாஉல் ரஹ்மான், பிரியா வர்கீசின் நியமன உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசுக்கு, பதவிக்கு தேவையான கற்பித்தல் அனுபவம் இல்லை எனவும் அவரது ஆராய்ச்சி காலத்தை கற்பித்தல் காலமாக கருத முடியாது என யு.ஜி.சி சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரியா வர்கீசின் நியமன உத்தரவிற்கு விதித்த தடையை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து கேரள ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com