விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி சஸ்பெண்ட்

கோப்புப்படம்
விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக வந்த இளம்பெண்ணிடம் நீதிபதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்,
விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொல்லம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக வந்த ஒரு இளம்பெண்ணிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் செய்தார். இந்தப் புகார் கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டு, தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழுவை அமைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட குடும்ப நல நீதிபதி உதயகுமார் கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும், மறு அறிவிப்பு வரும் வரை எந்த நீதித்துறைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி உதயகுமாரை கேரள ஐகோர்ட்டு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.






