

கொச்சி,
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பிஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவர் அங்குள்ள கன்னியாஸ்திரியை 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு 19-ந் தேதி ஆஜராக பேராயர் பிரான்கோ மூலக்கல்லுக்கு கேரள போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்க பிரான்கோ மூலக்கல் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை 25-ந் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. மேலும் இது தொடர்பாக அதே தேதியில் கேரள அரசு பதில் மனுதாக்கல் செய்யவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.