கேரள எல்லையை கர்நாடக அரசு மூடிய விவகாரம்: இரு மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு தீர்வு காணவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கேரள எல்லையை கர்நாடக அரசு மூடிய விவகாரத்தில், மத்திய சுகாதார துறை செயலாளர் இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கேரள எல்லையை கர்நாடக அரசு மூடிய விவகாரம்: இரு மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு தீர்வு காணவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கர்நாடக எல்லையையொட்டி கேரளாவில் அமைந்துள்ள காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, கர்நாடக அரசு தனது எல்லையை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மூடிவிட்டது. ஆம்புலன்சுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காசர்கோடு மாவட்டத்தில் 2 பேர் கொரோனாவுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் பலியானார்கள்.

இதையடுத்து, எல்லையை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி கேரள அரசு, மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, தேசிய நெடுஞ்சாலையை கர்நாடக அரசு உடனடியாக திறக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் கர்நாடக எல்லை இதுவரை திறக்கப்படவில்லை.

கேரள ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவும், கர்நாடக எல்லையை திறக்க கோரி காசர்கோடு எம்.பி. ராஜ்மோகன் உண்ணிதான் தாக்கல் செய்த மனுவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், தீபக் குப்தா ஆகியோர் முன்பு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தன.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கொரோனா வைரஸ் தொற்று நோயை தொடர்ந்து கேரளாவில் இருந்து கர்நாடகத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் வருவதை எவ்வாறு எளிதாக்குவது என்று முடிவு செய்ய இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு மத்திய சுகாதார செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அத்துடன் இரு மாநிலங்களும் இந்த பிரச்சினையை மேலும் பெரிதாக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com