

திருவனந்தபுரம்,
கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் தாமஸ் சாண்டி. இவர் மீது, நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்தது. விவசாய நிலையத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து சொகுசு விடுதி கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தாமஸ் சாண்டிக்கு எதிராக ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அறிக்கை அளித்தார். இந்த அறிக்கையை ரத்து செய்யக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் தாமஸ் சாண்டி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிமன்றம், தாமஸ் சாண்டியை கண்டித்தது. உங்கள் அரசுக்கு எதிராகவே நீங்கள் மனு கொடுத்துள்ளீர்கள். மனு தாக்கல் செய்வதற்கு பதிலாக ராஜினாமா செய்யலாம் என்று காட்டமாக தெரிவித்தது. மேலும், அமைச்சரவையின் கூட்டு பொறுப்பை மீறும் வகையில் அமைச்சரின் செயல்பாடு இருப்பதாகவும் நீதிமன்றம் விமர்சித்தது. தாமஸ் சாண்டிக்கு பெருத்த பின்னடவை இந்த விவகாரம் ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் தாமஸ் சாண்டி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தின.
இதையடுத்து, அமைச்சர் பொறுப்பில் இருந்து தாமஸ் சாண்டி விலக உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த 17 மாதங்களில், கேரளாவில் பதவி விலகும் 3 வது மந்திரி தாமஸ் சாண்டி ஆவார்.தாமஸ் சாண்டி காங்கிரஸ் கட்சியைசேர்ந்தவர் ஆவர். காங்கிரஸ் கட்சி கேரளாவில் சிபிஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்து கூட்டணி அரசை ஏற்படுத்தியுள்ளது.