வீட்டில் 25 ஆண்டுகள் வேலை செய்த மூதாட்டிக்கு இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்த பாதிரியார்

88 வயதான பார்வதிக்கு முதுமை காரணமாக கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
வீட்டில் 25 ஆண்டுகள் வேலை செய்த மூதாட்டிக்கு இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்த பாதிரியார்
Published on

எர்ணாகுளம்,

கேரளாவில் 25 ஆண்டுகளாக தன் வீட்டில் பணிபுரிந்த இந்து மூதாட்டிக்கு, இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்த கிறிஸ்தவ பாதிரியார்.

அநாதையாக தவித்த பெண்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் இரும்பணம் பகுதியைச் சேர்ந்தவர் பாயம்மா என்கிற பார்வதி (வயது 88). இவர் தனது 9-வது வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதையாக தவித்தார். உறவினர்கள் யாரும் கைதூக்கி விடாத நிலையில், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பல ஆண்டுகள் வேலை பார்த்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த டாக்டர் இறந்து போனார். இதனால் பார்வதியின் வேலை பறிபோனது.

பாதிரியார் ஜேக்கப்

இதையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் எர்ணாகுளம் மாவட்டம் அம்பாடி மலை பகுதியை சேர்ந்த பாதிரியார் ஜேக்கப் என்பவரது வீட்டில் பார்வதி பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் பாதிரியார் ஜேக்கப்பின் மனைவி இறந்துவிட்டார்.

குடும்ப உறுப்பினராக மாறினார்

இதனால் அவரது 6 வயது மகளான மெரினாவை, பார்வதி ஒரு பெற்ற தாயை போல பாசம்காட்டி வளர்த்து வந்தார். நாளடைவில் வேலைக்கார பெண் என்ற எல்லையை தாண்டி, ஜேக்கப்பின் குடும்பத்தில் ஒருவராகவே பார்வதி மாறிப்போனார். ஜேக்கப்பின் உறவினர்களும், பார்வதியின் சொந்த பந்தங்களும் அவர்களை ஒரே குடும்பமாகவே கருதி வந்தனர்.

சிகிச்சை

இந்த நிலையில், 88 வயதான பார்வதிக்கு முதுமை காரணமாக கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மரணம்

அங்கு பாதிரியார் ஜேக்கப்பும், அவரது மகள்களும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து பார்வதியை பார்த்துக்கொண்டனர். இருப்பினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 23-ந் தேதி பார்வதி உயிரிழந்தார்.

இந்து முறைப்படி இறுதிச்சடங்கு

தன் மகளை தாயாக வளர்த்த அந்த மூதாட்டியின் மறைவு பாதிரியார் ஜேக்கப்பின் குடும்பத்தை உலுக்கியது. இதையடுத்து, பார்வதியின் சொந்த மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க ஜேக்கப் முடிவு செய்தார். அதன்படி, பார்வதியின் உடலுக்கு இந்து முறைப்படி அனைத்து இறுதி சடங்குகளையும் பாதிரியார் ஜேக்கப் முன்னின்று நடத்தினார்.உறவினர்கள் சூழ, இந்து மத ஆச்சாரங்களின்படி மந்திரங்கள் ஓதப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மதம், சாதி ஆகியவற்றை கடந்து, 25 ஆண்டுகள் தன் குடும்பத்திற்காக உழைத்த பெண்ணுக்கு ஒரு மகனாக நின்று பாதிரியார் ஜேக்கப் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com