கேரள மழை வெள்ளம்: ஆபத்து என சிக்னல் காட்டி ஹெலிகாப்டரை இறக்கி செல்பி எடுத்து கொண்டு அனுப்பியவர்

இவரும் ஒரு மனிதரா! ஆபத்து என சிக்னல் காட்டி ஹெலிகாப்டரை இறக்கி செல்பி எடுத்து கொண்டு அனுப்பியவர் பாதுகாப்பு வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. #KeralaFloods2018
கேரள மழை வெள்ளம்: ஆபத்து என சிக்னல் காட்டி ஹெலிகாப்டரை இறக்கி செல்பி எடுத்து கொண்டு அனுப்பியவர்
Published on

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ராணுவத்தினர் தங்கள் உயிரை துச்சமாக மதித்து மீட்பு பணியில் ஈடுபட்டதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். ஆலுவா என்ற பகுதியில் உயிருக்கு போராடிய நிறைமாத கர்ப்பிணி சஜிதாவை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டதற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ராணுவ வீரர்களின் இந்த பணியை பாராட்டி மொட்டை மாடியில் தேங்க்யூ என்று பெரிய எழுத்துக்களால் கோலமிட்டு தங்கள் நன்றியை ராணுவத்தினருக்கு தெரிவித்தனர். இப்படியாக நெகிழ்ச்சி தருணங்கள் நிகழ்ந்த கேரளத்தில்தான் இன்னொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து மீட்பு படையை சேர்ந்த ஒருவர் மலையாள டிவி சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோ, வைரலாக பரவி வருகிறது. அந்த படை வீரர் கூறியது இதுதான்: நாங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சிவப்பு வண்ணத்தில் சட்டை அணிந்திருந்த ஒரு இளைஞர் அதை கழற்றி அங்குமிங்குமாக அசைத்தார். மொட்டை மாடியில் நின்ற அவரை பார்த்ததும் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று நினைத்து கடினமான பகுதி என்றபோதிலும், ஹெலிகாப்டரை கீழே இறக்கி அருகே கொண்டு சென்றோம்.

ஆனால் ஹெலிகாப்டர் அருகே வந்ததும் தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து ஹெலிகாப்டர் பின்னணியில் தன்னை செல்பி படம் எடுத்துக் கொண்டார். இதன் பிறகு, நீங்கள் சென்று விடலாம் என்று எங்களை நோக்கி டாட்டா காண்பித்து, அனுப்பி வைத்தார். இது போன்ற செயல்கள் தவறானது என்று அந்த பாதுகாப்பு வீரர் தெரிவிக்கிறார்.

இது போன்ற விஷமத்தனமான செயல்களால் உண்மையிலேயே உதவி கேட்போருக்கும் உதவி கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதை இதுபோன்ற மர மண்டையர்கள் எப்போதுதான் புரிந்து கொள்ளப்போகிறார்களோ?

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com