கேரளா: நிபா வைரஸ் பாதித்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகள் அறிவிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் புதிதாக எதுவும் பதிவாகாத நிலையில் கோழிக்கோட்டின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கேரளா: நிபா வைரஸ் பாதித்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகள் அறிவிப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நிபா வைரஸ் பரவல் காணப்பட்டது. 2018-ம் ஆண்டு 17 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்நிலையில், நிபா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, கேரள சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை அதிகாரிகள் மூடினர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் அரசு இறங்கியது.

இதுபற்றி கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் சட்டசபையில் கூறும்போது, இந்த நிபா வைரசானது குறைவான அளவு தொற்ற கூடிய தன்மை கொண்டபோதும், அதிக உயிரிழப்பு விகிதம் கொண்டது என்றும் இது மனிதரில் இருந்து மனிதருக்கு பரவ கூடியது என்றும் கூறினார்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, புனே நகரின் தேசிய வைராலஜி மையத்தின் குழுவினர் கேரளாவுக்கு சென்றனர். அவர்கள் மொபைல் ஆய்வகங்களை அமைத்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தஞ்சேரி, மருதோங்கரை, திருவள்ளூர், குட்டியடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிழும்பாறை உள்பட 9 பஞ்சாயத்துகளில் உள்ள வார்டுகளின் உள்ளேயும், வெளியேயும் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என முடிவானது.

எனினும், அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கான கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 9 பஞ்சாயத்துகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன என இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் நிபா வைரசின் பாதிப்புகள் எதுவும் புதிதாக பதிவாகவில்லை.

இதனை முன்னிட்டு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதுபற்றி மாவட்ட கலெக்டர் கீதா கூறும்போது, இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் இரவு 8 மணிவரை செயல்படலாம். நிபா ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு அனைத்து வங்கிகளும் மதியம் 2 மணிவரை செயல்படலாம்.

முக கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் உபயோகப்படுத்த வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். மக்கள் ஒன்றுகூடுவது கடுமையாக கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பிற கட்டுப்பாடுகள் அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com