கொரோனா தினசரி பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது; கேரளாவில் 24, 25-ந் தேதிகளில் முழு ஊரடங்கு

கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியநிலையில், வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாளை 3 லட்சம் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது; கேரளாவில் 24, 25-ந் தேதிகளில் முழு ஊரடங்கு
Published on

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, மலப்புரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் தலா 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இதனால், மொத்த பாதிப்பு 32 லட்சத்து 5 ஆயிரத்து 197 ஆக உயர்ந்தது. கொரோனாவால் 1 லட்சத்து 29 ஆயிரத்து 640 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில், 1 லட்சத்து 45 ஆயிரத்து 993 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், 11.97 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொரோனாவுக்கு 105 பேர் பலியானார்கள். அதனால், இந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 617 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருவதால், அதை கட்டுப்படுத்த கேரள அரசு பேரிடர் மேலாண்மை சட்டப்படி, கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கேரளாவில் ஏற்கனவே ஒவ்வொரு பகுதியிலும் அமலில் உள்ள தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் நீடிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் கூடுதல் தளர்வுகளை அளிக்கக்கூடாது.

வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். கடந்த மாதம் 12 மற்றும் 13-ந் தேதி முழு ஊரடங்கின்போது அறிவிக்கப்பட்ட அதே வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.

மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தில் நுண் கட்டுப்பாட்டு பகுதிகளை வரையறுக்க வேண்டும். புதிய பாதிப்புகளை குறைக்க கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

வருகிற 23-ந் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் பிரமாண்ட கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்துமாறு மாநில சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. ஒரே நாளில் 3 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை நடத்தும் இலக்குடன் அம்முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

சராசரி வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அதுபோல், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், தினசரி பரிசோதனையையும் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com